எனக்கெதிராக ஏன்
இத்தனை அம்புகள் தயாரிக்கிறாய்?
என்னிடம் உனக்கெதிராக
கவசம் மட்டுமே உள்ளது;
எனக்கு காக்கவும்,
தற்காக்கவும்தான் தெரியும்.
தாக்கத் தெரியாது;
அழிக்கவும் தெரியாது.
கொல்லும் அம்புகளைத்
தயாரிப்பதற்குப் பதிலாக, உன்
வெல்லும் அன்பை என்னிடம்
காட்டியிருக்கலாமே?
உன் மயக்கும் விழிக்
கண்ணசைவு ஒன்று போதுமே...
நான் கவசமிழந்த
கர்ணனாக!
உன் செவ்வுதட்டோர
புன்னகை ஒன்று போதுமே...
நான் சற்றும் சிந்திக்காமல்
சரணடைய!
அம்புகளைத் தயாரிக்கிறளாம்,
படையைத் திரட்டுகிறாளாம், வேடிக்கை.
இராணியாக்க இராஜாங்கமே காத்திருக்க
இராஜாவுடன் போரெதற்கு?
பிழைக்கத் தெரியாதவள்;
பிழையான கதைக்கு
பிறர் பேச்சைக் கேட்டு
பிள்ளையார் சுழி போட்டவள்.
இப்போதும் காலம் உள்ளது;
ஒருபோதும் நழுவவிடாதே.
கண்ணாலே ஜாடை காட்டு;
உதட்டாலே 'உம்' என்று சொல்.
பரிவாரங்களுடன் வருகிறேன்,
உன்னை அழைத்துச் செல்ல;
இல்லை, படைகளுடன் நீ வா,
களத்தில் என்னை வெல்ல.
- யதார்த்தக்கவிஞர்
பி.ஆர்.ஜெயராஜன்
வழக்குரைஞர்