அவள்
என்னை முழுமையாக
நம்புகிறாள்;
அவள்
என்னிடம் முற்றிலுமாக
சரணடைந்துவிட்டாள்;
அவள்
தன்னை என்னிடம்
மொத்தமாகக்
கொடுத்துவிட்டாள்;
காரணம் கேட்டால்,
எனது கவிதைகளுடன்
வாழ விருப்பம்
என்கிறாள்!
கற்பனை செய்து
சூடேறிப்போன நெற்றியில்
கற்பூர தைலம் தடவ ஆள்
வேண்டாமா எனக் கேட்கிறாள்!
கவிதையெழுதி
தேய்ந்த விரல்களுக்கு
உதட்டால் ஒத்தடம் கொடுத்து
பணிவிடை செய்கிறேன்
என்கிறாள்!
பேரன்பைக் கொண்ட
இப்பெண்ணுக்காக கவிதை
படைக்க முயன்றேன்;
சொற்கள் சிக்கவில்லை;
வரிகள் வசப்படவில்லை.
முழுமையாக நம்பி,
என்னைச் சரணடைந்து
மொத்தமாகக் கொடுத்தவளை
மாறுபட்டு வருணிக்க
என்னிடம் வார்த்தைகள்
இல்லாமல் போனது.
மூளையில்
ஒட்டிக்கொண்டிருந்த
ஒன்றிரண்டு சொற்களும்
வேறு சில புதிய சொற்களைத்
தேடி அனுப்புவதாக
கூறிச் சென்று விட்டன.
அழகு மிக்க
அவளை தங்களால் விவரிக்க
இயலாது என வரிகள்
கை விரித்துவிட்டன.
தெய்வமே....
நானென் செய்வேன்...?
என் தெய்வமே
நானென் செய்வேன்...?
உன்னிடம் ஒரேயொரு வரத்தை
மட்டுமே கேட்கிறேன்....
உன்னிடம் ஒரேயொரு வரத்தை
மட்டுமே கேட்கிறேன்....
உனக்கு கருணை இருந்தால்
உதவி செய்...
அவளை வருணிக்க எனக்கு
சில சொற்களை கொடு !
அவ்வளவுதான்....

- பி.ஆர்.ஜெயராஜன், சேலம் 7.