என்னைப் பற்றி ...

My photo
Advocate, Author and Academician
Showing posts with label அவள். Show all posts
Showing posts with label அவள். Show all posts

Thursday, 26 March 2020

அகநானூறு பாடலாம் வா..!


 

எனக்கெதிராக ஏன்
இத்தனை அம்புகள் தயாரிக்கிறாய்?
என்னிடம் உனக்கெதிராக
கவசம் மட்டுமே உள்ளது;

எனக்கு காக்கவும்,
தற்காக்கவும்தான் தெரியும்.
தாக்கத் தெரியாது;
அழிக்கவும் தெரியாது.

கொல்லும் அம்புகளைத்
தயாரிப்பதற்குப் பதிலாக, உன்
வெல்லும் அன்பை என்னிடம்
காட்டியிருக்கலாமே?

உன் மயக்கும் விழிக்
கண்ணசைவு ஒன்று போதுமே...
நான் கவசமிழந்த
கர்ணனாக!

உன் செவ்வுதட்டோர
புன்னகை ஒன்று போதுமே...
நான் சற்றும் சிந்திக்காமல்
சரணடைய!

அம்புகளைத் தயாரிக்கிறளாம்,
படையைத் திரட்டுகிறாளாம், வேடிக்கை.
இராணியாக்க இராஜாங்கமே காத்திருக்க
இராஜாவுடன் போரெதற்கு?

பிழைக்கத் தெரியாதவள்;
பிழையான கதைக்கு
பிறர் பேச்சைக் கேட்டு
பிள்ளையார் சுழி போட்டவள்.

இப்போதும் காலம் உள்ளது;
ஒருபோதும் நழுவவிடாதே.
கண்ணாலே ஜாடை காட்டு;
உதட்டாலே 'உம்' என்று சொல்.

பரிவாரங்களுடன் வருகிறேன்,
உன்னை அழைத்துச் செல்ல;
இல்லை, படைகளுடன் நீ வா,
களத்தில் என்னை வெல்ல.



- யதார்த்தக்கவிஞர்
பி.ஆர்.ஜெயராஜன்
வழக்குரைஞர் 

Tuesday, 21 January 2020

சொற்கள் சிக்கவில்லை; வரிகள் வசப்படவில்லை.




அவள்
என்னை முழுமையாக
நம்புகிறாள்;

அவள்
என்னிடம் முற்றிலுமாக
சரணடைந்துவிட்டாள்;

அவள்
தன்னை என்னிடம்
மொத்தமாகக்
கொடுத்துவிட்டாள்;

காரணம் கேட்டால்,
எனது கவிதைகளுடன்
வாழ விருப்பம்
என்கிறாள்!

கற்பனை செய்து
சூடேறிப்போன நெற்றியில்
கற்பூர தைலம் தடவ ஆள்
வேண்டாமா எனக் கேட்கிறாள்!

கவிதையெழுதி
தேய்ந்த விரல்களுக்கு
உதட்டால் ஒத்தடம் கொடுத்து
பணிவிடை செய்கிறேன்
என்கிறாள்!

பேரன்பைக் கொண்ட
இப்பெண்ணுக்காக  கவிதை
படைக்க முயன்றேன்;
சொற்கள் சிக்கவில்லை;
வரிகள் வசப்படவில்லை.

முழுமையாக நம்பி,
என்னைச் சரணடைந்து
மொத்தமாகக் கொடுத்தவளை
மாறுபட்டு வருணிக்க
என்னிடம் வார்த்தைகள்
இல்லாமல் போனது.

மூளையில்
ஒட்டிக்கொண்டிருந்த
ஒன்றிரண்டு சொற்களும்
வேறு சில புதிய சொற்களைத்
தேடி அனுப்புவதாக
கூறிச் சென்று விட்டன.

அழகு மிக்க
அவளை தங்களால் விவரிக்க
இயலாது என வரிகள்
கை விரித்துவிட்டன.

தெய்வமே....
நானென் செய்வேன்...?
என் தெய்வமே
நானென் செய்வேன்...?

உன்னிடம் ஒரேயொரு வரத்தை
மட்டுமே கேட்கிறேன்....
உன்னிடம் ஒரேயொரு வரத்தை
மட்டுமே கேட்கிறேன்....

உனக்கு கருணை இருந்தால்
உதவி செய்...
அவளை வருணிக்க எனக்கு
சில சொற்களை கொடு !
அவ்வளவுதான்....






- பி.ஆர்.ஜெயராஜன், சேலம் 7.


Saturday, 2 February 2013

வாழ்ந்தாக வேண்டும்.... வா.. வா.. கண்ணே..!



என்னதான் கோபித்துக் கொண்டாலும்
என்னத்தான்தானே கோபித்துக் கொண்டார்
என்றிருந்தவளை மாற்றியவர் யாரோ..?
என்னிடமிருந்து பிரித்தது எதுவோ..?

எங்கு சென்று வந்தாலும்
அங்கிங்கென தேடாமல், கண்
மங்கிக் காத்திருக்கும் என்னவளை
இன்றிங்கு காணாமல் தவிக்கின்றேன்..!

வாய்விட்டு எதையும் கேட்காதவள்
வாய்விட்டு என்ன கூறினாளோ..?
காது கொடுத்து கேட்டவர்
கதையை திரித்து விட்டாரோ?

முடிந்ததென நினைத்தாளா? இல்லை
முறிந்து விட்டதாக நினைத்தாளா?
மடிந்தாலும் முடியாதது இது !
கொடி சாய்ந்தாலும் முறியாதிது !

கேட்காமல் அனைத்தையும் தந்தேன்,
உன் அணைப்பிற்காக அல்ல.
சொல்லாமல் எல்லாவற்றையும் செய்தேன்,
நீ சொல்லாமல் செல்வதற்கல்ல.

பிழை சொல்லி இருந்தால்,
பிழைக்கும் வழி சொல்லியிருப்பேன்.
பிழைக்கும் மன்னிப்புண்டு; இங்கு
பிழை செய்தவள் நீதான்.

தாய் வீடு தங்குமிடம்;
தாயாய் தாங்கிய என்னிடம்தான்
நீ வாழ்ந்தாக வேண்டும்  
வா.. வா... கண்ணே !

Saturday, 14 January 2012

இத் தையில் அத்தை மகள் !


அத் தையில்
அத்தை மகள் வந்தாள்.
தத்தை மொழி சொன்னாள்; முத்
தத்தை கேட்டாள்.

மாசிலா அவளை
மாசியில் மண முடித்தேன்.
மா புளிப்பில்லை என்றாள்; அம்
மாவிற்கு அச்சாரமிட்டாள்.

பங்குனி வந்தது
பங்கினி இல்லை என்றாள்.
பாங்கு பார்க்கச் சொன்னாள்; தெம்
மாங்கு பாடினாள்.

நித்திரை நிலவுக்கு
சித்திரைச் சூரியன் ஆகாது.
நிழலில் இருக்கின்றேன் என்றாள்; நற்
சூழலில் வைத்திருக்கின்றேன்.

வைகாசி வந்தது.
கை பிடித்தார் வைத்தியர்.
தையில் குழந்தை என்றார்; அத்
தை மகளுக்கு.

ஆனி பிறந்தது.
இனிமை இன்னும் கூடியது.
மேனி மெருகு ஏறியது; நாணிக்
கோணி நடந்தாள்.

ஆடியில் தாய்வீட்டினர்
தேடி வந்து பார்த்தனர்.
ஓடிப் பிடித்து ஆடியவர்கள்; சரி
ஜோடி என்றனர்.

தாவணி போட்டிருந்தவளுக்கு
ஆவணியில் வளை காப்பு.
கரம் பிடித்தவள் சென்றாள், தன்
பிறந்த வீட்டிற்கு.

புரட்டாசி மாதம்
புதிதாக தோன்றியது எனக்கு.
பறந்தேன் என்னத்தை வீட்டுக்கு, அவள்
பரவசம் ஆனாள்.

குழந்தை உதைத்தது,
குளுமை ஆன ஐப்பசியில்.
அதோடு பேசத் தொடங்கினாள், நான்
ஊமை ஆனேன்.

கார்த்திகை முருகனா,
கிருத்திகை பெண்ணா, எதுவானாலும்
நலமுடன் பிறக்க வேண்டுகிறேன், என்
குல தெய்வத்தை.

பனி முடிந்து
மார்கழியும் விடை பெற்றது.
பனிக்குட நீர் பெருக்கெடுத்து, பிரசவ
பிணியும் வந்தது.

இத் தையில்
அத்தை மகளுக்கொரு மகள்.
தாயும்-சேயும் நலம்; பொங்கலுடன் 
கரும்பும் சுபம் !

அனைவருக்கும் 
பொங்கல் நல் வாழ்த்துகள் !

Monday, 26 December 2011

எனக்கு இறக்கை முளைத்து விட்டது !



இருவரும் ஒன்றாகி விட்டோம் என்றாய்,
இணை பிரிய வாய்ப்பில்லை என்றாய்,
இனி எல்லாம் இனிமைதான் என்றாய், எனக்கு 
இறக்கை முளைத்து விட்டது.

பூ வேண்டும் என்றாய்,
பொட்டு வேண்டும் என்றாய்,
மட்டற்ற மகிழ்ச்சி கொண்டேன், எனக்கு 
இறக்கை முளைத்து விட்டது.

கொலுசு வேண்டும் என்றாய்,
கொண்டு வந்து கொடுத்தவுடன்,
செல்லமாய் சிணுங்கினாய்,  எனக்கு 
இறக்கை முளைத்து விட்டது.

செல்பேசி வேண்டும் என்றாய்,
சென்று வர வாகனம் வேண்டும் என்றாய்,
கொடுத்தவுடன், 'அன்பே' என்றாய், எனக்கு 
இறக்கை முளைத்து விட்டது.

இலகுரக வாகனத்தில் என் இடுப்பை
இலகுவாக பிடித்துக் கொண்டு வந்தாய்,
இன்பமே நீதானென நினைத்தேன், எனக்கு 
இறக்கை முளைத்து விட்டது.

காடுமேடெல்லாம் சுற்றினோம், அயல்
நாட்டிலிருந்து அத்தை மகன் வந்தான்,
சற்றும் நான் நினைக்கவில்லை, அவளுக்கு
இறக்கை முளைத்து விட்டது.


பட்சி பறந்து போச்சு பாஸ் ...!

p/c : https://www.instasaver.org

Saturday, 24 December 2011

அருகில் நீ இல்லையே..! - கவிஞர் பிஆர்ஜெ


மலை மீது 
மெல்லப் பனி தழுவ,
குளிருக்கு கம்பளியும்
அனலுக்கு தணலுமிருக்க,
அருகில் நீ இல்லையே..!


மாலை நேரத்து
மலை வாசப் பூக்கள்
வனம் எங்கும்
மணம் பரப்பிச் செல்ல,
அருகில் நீ இல்லையே..!

அந்தி சாய்ந்த காற்றை
சந்திரன் மேலும் குளிரூட்ட
காட்டு மரங்கள் சலசலக்க
உன் நினைவால் மூச்சுத் திணற,
அருகில் நீ இல்லையே..!

மௌனமே பேச்சுத் துணையாக
தனிமையே பெருங் கொடுமையாக
நினைத்த இடமெல்லாம் நீ தெரிய
கனத்த இதயம் கண்ணீர் வடிக்க
அருகில் நீ இல்லையே..! 

அருகில் நீ இருந்திருந்தால்,
பனிக்கு எதற்கு அனல் ?
பூவே என் வசமான பிறகு 
பூ வாசம் எதற்கு ?

மரங்களின் சலசலப்பு, உன்
கலகல சிரிப்பால் அடங்குமே!


அருகில் நீ இருந்திருந்தால்,
என் மூச்சே நீதானே, பிறகு
நான் எதற்கு திணற?
உன் பேச்சே வரம்தானே,
நான் சாபவிமோசனம் பெற.
என் தனிமை இனிமையாகிவிடுமே!

- கவிஞர் பிஆர்ஜெ



Related Posts Plugin for WordPress, Blogger...