என்னைப் பற்றி ...

My photo
Advocate, Author and Academician

Saturday 14 January 2012

இத் தையில் அத்தை மகள் !


அத் தையில்
அத்தை மகள் வந்தாள்.
தத்தை மொழி சொன்னாள்; முத்
தத்தை கேட்டாள்.

மாசிலா அவளை
மாசியில் மண முடித்தேன்.
மா புளிப்பில்லை என்றாள்; அம்
மாவிற்கு அச்சாரமிட்டாள்.

பங்குனி வந்தது
பங்கினி இல்லை என்றாள்.
பாங்கு பார்க்கச் சொன்னாள்; தெம்
மாங்கு பாடினாள்.

நித்திரை நிலவுக்கு
சித்திரைச் சூரியன் ஆகாது.
நிழலில் இருக்கின்றேன் என்றாள்; நற்
சூழலில் வைத்திருக்கின்றேன்.

வைகாசி வந்தது.
கை பிடித்தார் வைத்தியர்.
தையில் குழந்தை என்றார்; அத்
தை மகளுக்கு.

ஆனி பிறந்தது.
இனிமை இன்னும் கூடியது.
மேனி மெருகு ஏறியது; நாணிக்
கோணி நடந்தாள்.

ஆடியில் தாய்வீட்டினர்
தேடி வந்து பார்த்தனர்.
ஓடிப் பிடித்து ஆடியவர்கள்; சரி
ஜோடி என்றனர்.

தாவணி போட்டிருந்தவளுக்கு
ஆவணியில் வளை காப்பு.
கரம் பிடித்தவள் சென்றாள், தன்
பிறந்த வீட்டிற்கு.

புரட்டாசி மாதம்
புதிதாக தோன்றியது எனக்கு.
பறந்தேன் என்னத்தை வீட்டுக்கு, அவள்
பரவசம் ஆனாள்.

குழந்தை உதைத்தது,
குளுமை ஆன ஐப்பசியில்.
அதோடு பேசத் தொடங்கினாள், நான்
ஊமை ஆனேன்.

கார்த்திகை முருகனா,
கிருத்திகை பெண்ணா, எதுவானாலும்
நலமுடன் பிறக்க வேண்டுகிறேன், என்
குல தெய்வத்தை.

பனி முடிந்து
மார்கழியும் விடை பெற்றது.
பனிக்குட நீர் பெருக்கெடுத்து, பிரசவ
பிணியும் வந்தது.

இத் தையில்
அத்தை மகளுக்கொரு மகள்.
தாயும்-சேயும் நலம்; பொங்கலுடன் 
கரும்பும் சுபம் !

அனைவருக்கும் 
பொங்கல் நல் வாழ்த்துகள் !

Tuesday 3 January 2012

பேரிடர் மேலாண்மை ?

புதுவையிலே
புயல் வரப் போறது தெரியும்...

கடலூரிலே
கடல் ஊருக்குள் வரப்போறது தெரியும்...

சென்னையிலே
தென்னை மரமெல்லாம் சாயப் போறது தெரியும்...

கப்பல்
கரை தட்டும்ன்னு தெரியும்...

'தானே'
தானா வந்திச்சா?

நாலு 
நாளைக்கு முன்னமே சொல்லிட்டு வந்திச்சு..!

காத்து வீசுனா
கடலோரம் காலின்னு தெரியும்..

மழை பெய்ஞ்ச
மக்கள் மாய்ந்து போவாங்கன்னு தெரியும்..

தண்ணி புகுந்தா
தவிச்சு போவாங்கன்னு தெரியும்..

வேகம் தெரியும்..!
விவேகம் வேணாமா..?

பேரிடர்ன்னு தெரியும்..
பேருக்கு கூட முன்னெச்சரிக்கை இல்லையே?

மக்களுக்கும் தெரியலே..
மகேசனுக்கும் புரியலே..

அப்புறம் எதுக்குங்க 
மேலாண்மை..? 

Related Posts Plugin for WordPress, Blogger...