என்னைப் பற்றி ...

My photo
Advocate, Author and Academician

Saturday, 2 February 2013

வாழ்ந்தாக வேண்டும்.... வா.. வா.. கண்ணே..!என்னதான் கோபித்துக் கொண்டாலும்
என்னத்தான்தானே கோபித்துக் கொண்டார்
என்றிருந்தவளை மாற்றியவர் யாரோ..?
என்னிடமிருந்து பிரித்தது எதுவோ..?

எங்கு சென்று வந்தாலும்
அங்கிங்கென தேடாமல், கண்
மங்கிக் காத்திருக்கும் என்னவளை
இன்றிங்கு காணாமல் தவிக்கின்றேன்..!

வாய்விட்டு எதையும் கேட்காதவள்
வாய்விட்டு என்ன கூறினாளோ..?
காது கொடுத்து கேட்டவர்
கதையை திரித்து விட்டாரோ?

முடிந்ததென நினைத்தாளா? இல்லை
முறிந்து விட்டதாக நினைத்தாளா?
மடிந்தாலும் முடியாதது இது !
கொடி சாய்ந்தாலும் முறியாதிது !

கேட்காமல் அனைத்தையும் தந்தேன்,
உன் அணைப்பிற்காக அல்ல.
சொல்லாமல் எல்லாவற்றையும் செய்தேன்,
நீ சொல்லாமல் செல்வதற்கல்ல.

பிழை சொல்லி இருந்தால்,
பிழைக்கும் வழி சொல்லியிருப்பேன்.
பிழைக்கும் மன்னிப்புண்டு. இங்கு
பிழை செய்தவள் நீதான்.

தாய் வீடு தங்குமிடம்;
தாயாய் தாங்கிய என்னிடம்தான்
நீ வாழ்ந்தாக வேண்டும்  
வா.. வா... கண்ணே !

Saturday, 14 January 2012

இத் தையில் அத்தை மகள் !


அத் தையில்
அத்தை மகள் வந்தாள்.
தத்தை மொழி சொன்னாள்; முத்
தத்தை கேட்டாள்.

மாசிலா அவளை
மாசியில் மண முடித்தேன்.
மா புளிப்பில்லை என்றாள்; அம்
மாவிற்கு அச்சாரமிட்டாள்.

பங்குனி வந்தது
பங்கினி இல்லை என்றாள்.
பாங்கு பார்க்கச் சொன்னாள்; தெம்
மாங்கு பாடினாள்.

நித்திரை நிலவுக்கு
சித்திரைச் சூரியன் ஆகாது.
நிழலில் இருக்கின்றேன் என்றாள்; நற்
சூழலில் வைத்திருக்கின்றேன்.

வைகாசி வந்தது.
கை பிடித்தார் வைத்தியர்.
தையில் குழந்தை என்றார்; அத்
தை மகளுக்கு.

ஆனி பிறந்தது.
இனிமை இன்னும் கூடியது.
மேனி மெருகு ஏறியது; நாணிக்
கோணி நடந்தாள்.

ஆடியில் தாய்வீட்டினர்
தேடி வந்து பார்த்தனர்.
ஓடிப் பிடித்து ஆடியவர்கள்; சரி
ஜோடி என்றனர்.

தாவணி போட்டிருந்தவளுக்கு
ஆவணியில் வளை காப்பு.
கரம் பிடித்தவள் சென்றாள், தன்
பிறந்த வீட்டிற்கு.

புரட்டாசி மாதம்
புதிதாக தோன்றியது எனக்கு.
புறப்பட்டேன் என்னத்தை வீட்டுக்கு, அவள்
பரவசம் ஆனாள்.

குழந்தை உதைத்தது,
குளுமை ஆன ஐப்பசியில்.
அதோடு பேசத் தொடங்கினாள், நான்
ஊமை ஆனேன்.

கார்த்திகை முருகனா,
கிருத்திகை பெண்ணா, எதுவானாலும்
நலமுடன் பிறக்க வேண்டுகிறேன், என்
குல தெய்வத்தை.

பனி முடிந்து
மார்கழியும் விடை பெற்றது.
பனிக்குடம் உடைந்து நீர்; பிரசவ
வலி வந்தது.

இத் தையில்
அத்தை மகளுக்கொரு மகள்.
தாயும்-சேயும் நலம்; பொங்கலுடன் 
கரும்பும் சுபம் !

அனைவருக்கும் 
பொங்கல் நல் வாழ்த்துகள் !

Tuesday, 3 January 2012

பேரிடர் மேலாண்மை ?

புதுவையிலே
புயல் வரப் போறது தெரியும்...

கடலூரிலே
கடல் ஊருக்குள் வரப்போறது தெரியும்...

சென்னையிலே
தென்னை மரமெல்லாம் சாயப் போறது தெரியும்...

கப்பல்
கரை தட்டும்ன்னு தெரியும்...

'தானே'
தானா வந்திச்சா?

நாலு 
நாளைக்கு முன்னமே சொல்லிட்டு வந்திச்சு..!

காத்து வீசுனா
கடலோரம் காலின்னு தெரியும்..

மழை பெய்ஞ்ச
மக்கள் மாய்ந்து போவாங்கன்னு தெரியும்..

தண்ணி புகுந்தா
தவிச்சு போவாங்கன்னு தெரியும்..

வேகம் தெரியும்..!
விவேகம் வேணாமா..?

பேரிடர்ன்னு தெரியும்..
பேருக்கு கூட முன்னெச்சரிக்கை இல்லையே?

மக்களுக்கும் தெரியலே..
மகேசனுக்கும் புரியலே..

அப்புறம் எதுக்குங்க 
மேலாண்மை..? 

Friday, 30 December 2011

பலதும் சிலதும் ... வாழ்த்துகள் 2012 !பல பிரச்சனைகள்,
பல பாதிப்புகள்,
பல போட்டிகள், 
பல சோதனைகள்,
பல வேதனைகள்,
பல எதிர்பார்ப்புகள்,
பல ஏமாற்றங்கள்,
பல தொந்தரவுகள், 
பல துன்பங்கள்,
பல இடர்கள்,
பல இழப்புகள்,
பல நிர்பந்தங்கள்,
பல நிராகரிப்புகள்,
பல தவிப்புகள்,
பல தடுமாற்றங்கள்,
பல சலிப்புகள்,
பல சங்கடங்கள்,
பல சறுக்கல்கள்,
பல அயற்சிகள்,
பல பெயர்ச்சிகள்,

பட்டியல் நீளும் இந்தப்
பலது இருந்தாலும், இடையே,-

சில தீர்வுகள், 
சில வெற்றிகள்,
சில சாதனைகள்,
சில இன்பங்கள்,
சில ஆதாயங்கள்,
சில ஆதரவுகள், 
சில அனுபவங்கள்,
சில கேளிக்கைகள்,
சில ஏற்றங்கள்,
சில நிறைவுகள்,
சில நம்பிக்கைகள்,
சில முயற்சிகள்,
சில முடிவுகள்,
சில சேமிப்புகள்,
சில சேர்க்கைகள்,

இப்படி சிலதும் நடந்தன,
இதோ விடை பெறும் இந்த 2011-இல். 

பலது வந்தாலும்,
சிலது நடந்தாலும்,
சொல்வது யாதெனில்,-
வாழ்ந்து கொண்டிருக்கிறோம்,
'வா' பார்த்துக் கொள்வோம் என்று
துணிவுடன், தன்னம்பிக்கையுடன்
தளராமல் இருக்கின்றோம்.

எண்களில் ஐந்து
என்பதற்கு எப்போதும்
சிறப்புண்டு, ஏற்றமுண்டு.
புத்தாண்டு 2012-ஐ கூட்டினால்
முத்தாக வருவது ஐந்துதானே?


பலன் தரவரும் 2012
'பல'தை சிலதாக்கி,
'சில'தை பலதாக்கி,
வாழ்வை வளமாக்கி,
வளர்ச்சியை கூட்டி,
இன்பத்தை பெருக்கி,
இல்லத்தை நலமாக்கி,
உள்ளத்தை நல்லதாக்கி,
உற்சாகத்தை வெள்ளமாக்கி,
உயர.. உயர.. உயர்த்த

2012
புத்தாண்டு நல்வாழ்த்துகள் !
விஷ் யு எ ஹாப்பி நியூ இயர், 2012  !!Tuesday, 27 December 2011

நீங்க ஏன் அப்படி நினைக்கிறீங்க... ?

"கஷ்டம்ன்னா 
கண்ணு தெரியுது.."

நீங்க ஏன்
அப்படி நினைக்கிறீங்க... ?
இப்படி நினைங்க..!

"உங்களை அவங்களோட
இருட்டை விரட்ற
மெழுகுவர்த்தியா
நினைக்கிறாங்கன்னு
பெருமைப்படுங்க"

"காரியம் முடிக்க 
காலைப் பிடிக்கிறான் பாரு"

நீங்க ஏன்
அப்படி நினைக்கிறீங்க... ?
இப்படி நினைங்க..!

"உங்களால மட்டும்தான்
முடியும்ன்னு அவங்க
நம்புறாங்கன்னு
பெருமைப்படுங்க"


"மனுசன்னா கொஞ்சமாவது 
நன்றி விசுவாசம் வேணும் " 

நீங்க ஏன்
அப்படி நினைக்கிறீங்க... ?
இப்படி நினைங்க..!

"தொந்தரவு
தொலைந்து போச்சுன்னு
நிம்மதியா இருங்க"

 "அவங்க செஞ்ச துரோகத்தை 
மன்னிக்க முடியாது"

நீங்க ஏன்
அப்படி நினைக்கிறீங்க... ?
இப்படி நினைங்க..!

"உங்களுக்கு
'பரந்த மனசு' என்பதை
அவங்க உறுதிபடுத்தறாங்க"

ஒன்னு மட்டும் நல்லா சொல்றேன்,- 
"விட்டுக் கொடுப்பவர் 
கெட்டுப் போவதில்லை.
தட்டிக் கொடுப்பவர் 
தாழ்ந்து போவதில்லை."
காத்தோட திசைய மாத்த முடியாது - ஆனா..
காத்துக்கு தோதா சமயம்  பாத்து 
கப்பல் விடலாம் இல்லையா?


இதுதாங்க மேட்டரு,
இனி போடுங்க மீட்டரு !

Monday, 26 December 2011

எனக்கு இறக்கை முளைத்து விட்டது !இருவரும் ஒன்றாகி விட்டோம் என்றாய்,
இணை பிரிய வாய்ப்பில்லை என்றாய்,
இனி எல்லாம் இனிமைதான் என்றாய், எனக்கு 
இறக்கை முளைத்து விட்டது.

பூ வேண்டும் என்றாய்,
பொட்டு வேண்டும் என்றாய்,
மட்டற்ற மகிழ்ச்சி கொண்டேன், எனக்கு 
இறக்கை முளைத்து விட்டது.

கொலுசு வேண்டும் என்றாய்,
கொண்டு வந்து கொடுத்தவுடன்,
செல்லமாய் சிணுங்கினாய்,  எனக்கு 
இறக்கை முளைத்து விட்டது.

செல்பேசி வேண்டும் என்றாய்,
சென்று வர வாகனம் வேண்டும் என்றாய்,
கொடுத்தவுடன், 'அன்பே' என்றாய், எனக்கு 
இறக்கை முளைத்து விட்டது.

இலகுரக வாகனத்தில் என் இடுப்பை
இலகுவாக பிடித்துக் கொண்டு வந்தாய்,
இன்பமே நீதானென நினைத்தேன், எனக்கு 
இறக்கை முளைத்து விட்டது.

காடுமேடெல்லாம் சுற்றினோம், அயல்
நாட்டிலிருந்து அத்தை மகன் வந்தான்,
சற்றும் நான் நினைக்கவில்லை, அவளுக்கு
இறக்கை முளைத்து விட்டது.


பட்சி பறந்து போச்சு பாஸ் ...!

p/c : https://www.instasaver.org

Saturday, 24 December 2011

அருகில் நீ இல்லையே..!மலை மீது 
மெல்லப் பனி தழுவ,
குளிருக்கு கம்பளியும்
அனலுக்கு தணலும் இருக்க,
அருகில் நீ இல்லையே..!

காலை வரை வாசம் வீசும்
மாலை நேரப் பூக்கள்
வனமெங்கும்
மணம் பரப்ப,
அருகில் நீ இல்லையே..!

அந்தி சாயும் நேரத்தை
சந்திரன் மென்மையாக தழுவ,
நாடி வரும் பனிக் காற்றை
ஜோடிகளின் மூச்சுக் காற்று உருக்க,
அருகில் நீ இல்லையே..!

சலனமில்லாமல் ஏரி இருக்க
மனமெல்லாம் உன்னுள் லயிக்க
கனத்த இதயம் கண்ணீர் வடிக்க
நினைத்த இடமெல்லாம் நீ தெரிய
அருகில் நீ இல்லையே..!

Related Posts Plugin for WordPress, Blogger...